×

கனி மரம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ரிஷ்ய முக பர்வத மலை, நிறைமாத கர்ப்பிணி, அட்சதை, ஆசீர்வாதம், வாங்குவது போல மழைச்சாரலை வாங்கிக் கொண்டிருந்தது. மலையடிவாரத்தில் ஒரு பெண், பாறையின் மீது சாய்ந்தபடி பம்பை நதியைப் பார்த்தபடியிருந்தாள். அவள் சபரீகர்கள் குலத்தைச் சார்ந்த ஒரு வேடுவப் பெண். தன்னந்தனியாளாக சுற்றித் திரிந்தபடி இருந்தவள், அவளுக்கென்று எந்த நியமங்களும் இருந்ததில்லை. இலை தழைகளாலான ஆடை போல, ஒன்று இருக்கும். எந்த சிந்தனையுமின்றி வாழ்பவள்.

முயலைப் பார்த்தால், பாய்ந்து பிடிப்பாள். அதன் காதுகளைப் பிடித்துச் சுழற்றி பாறையில் அடித்து ரத்தம் வழிய தின்பது பிடிக்கும். மானைக் கண்டால், அதன் கொம்பினைப் பிடித்து தரையில் தேய்த்துத் தின்பாள். மொத்தத்தில், ஊர்வன, பறப்பன, நீந்துவன என உயிர்வாழ்வன எல்லாம் பதார்த்தங்களாகத்தான் அவளுக்குத் தெரியும். உண்பது, பின் எங்காவது உறங்குவதுதான் வழக்கம்.

இன்றுதான் முதல் முதலாய் அந்த பாறையில் சாய்ந்து பம்பை நதியைப் பார்த்தபடி தண்ணீரில் நேர்ந்த மாற்றத்தை உணரத் தொடங்கினாள். காலையில் மதங்க முனிவர் ஆசிரமத்திலிருந்து, சீடர்களுடன் பம்பை நதிக்கு சென்ற காட்சி மனதில் மீண்டும்மீண்டும் ஓடியது. மதங்க முனிவர், மிக மெல்லிய சரீரம், நீண்ட கைகள், முகத்தில் சூரிய ஒளியனைய கூடிய தேஜஸ், கூரிய பார்வை, என தவத்தின் உருவகமாக இருந்தார்.

கொஞ்சம் தள்ளியிருந்துதான் அவரைத் தரிசித்தாள். அந்த ஒரு நிமிடம், ஒரு பூ மலர்வதற்கான நேரம்தான் அவளைப் புரட்டிப் போட்டுவிட்டது. இப்பொழுது அவளுக்கு எல்லாமே மாறிவிட்டது. முயல் எவ்வளவு வெண்மையாய், அழகாய் துள்ளி ஓடுகிறது! இந்தப் புள்ளிகளுடன் மான், எத்தனை அழகு! பூக்கள், செடிகள், மரங்கள் என மொத்த காடும் மிக ரம்மியமாகத் தெரிந்தது. ரசனை அவளைப் பற்றிக் கொண்டது. இந்த மாற்றம் மிகவும் பிடித்திருந்தது. மனதும், புத்தியும் மென்மை ஆயிற்று. தனது இந்த இயல்பைப் பற்றிக் கொள்ளத்தவித்தது.

முதல் தீர்மானம், ‘இனி நான் உயிர் வதை செய்வதில்லை. இனி இந்த மரங்களின், கனிகள் மட்டும்தான் எனது உணவு. எந்த உயிருக்கும் தீங்கு செய்ய போவதில்லை’ என முடிவாயிற்று. இத்தனை மென்மையையும் தந்த அந்தத் தவமுனிக்கு என்ன செய்யலாம்? என வாழ்வில் முதன் முறையாக யோசித்தாள். அங்கிருந்த நீண்ட மரக்கிளை ஒன்றை ஒடித்தாள். செடிகளை ஒன்று திரட்டி கொடியினால் கட்டி அந்த மக்கிளையின் ஒரு நுனியில் இணைத்தாள். தரையைப் பெருக்க துவங்கினாள். ஏல்லாமுமே பிடித்திருந்தது. மதங்க முனிவர் ஆசிரமம் துவங்கி, பம்பை நதிக்கரை வரை பெருக்கினாள். மலர்த் தூவினாள்.

வழிந்த வியர்வையைத் துடைத்தபடி, முதன் முதலில் பம்பை நதியில் மூழ்கி அமிழ்ந்து குளித்து எழுந்தாள். தன் முகத்தை நீரில் பார்த்தாள். தன்னுடய பிம்பம் அவளுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. இன்றுதான் தன் வாழ்வின் முதல் நாள் போல குதூகலித்தாள். இதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவில், தீர்க்கமாக இருந்தாள். விடியும் முன்பே, எழுந்து பெருக்கி பாதையை சுத்தம் செய்தாள். முனிவர் நடந்து நதி தீரத்துக்குச் செல்வதற்கு முன்பு, முடித்திடுவாள். ஒரு மரத்தின் மறைவில் நின்றபடி முனிவர் நடப்பதை பார்ப்பது மட்டுமே பிரதானமாக இருந்தது. சில நாட்கள் கழிந்தன.

தொடர்ந்து பாதையில் ஏற்பட்ட மாறுதலை கவனித்த மதங்கமுனிவர், சீடர்களை அழைத்து, “இந்த நல்ல காரியத்தை நீங்கள் செய்ததாக எனக்குத் தோன்றவில்லை. யார் இதைச் செய்கிறார்கள்? என்று கண்டுபிடியுங்கள்,” எனப்பணித்தார். இரண்டு சீடர்கள் அந்தப் பெண்ணை கண்டனர். அவளை அழைத்ததும் பயந்து நடுங்கினாள். இனி இது போல செய்ய மாட்டேன். மன்னிக்குமாறு ஜாடையில் கெஞ்சினாள்.

சீடர்கள், தங்கள் குரு பாராட்டவே அழைப்பதாக விளக்கினார்கள். இருந்தும் நடுங்கியபடியே முனிவர் முன்சென்றாள். நெடுஞ்சாண்கிடையாக நமஸ்கரித்தாள். இந்த செயல்கூட முனிவரின் அருளாகவேபட்டது. “உன் பெயரென்ன?” அவளிடம் பதிலில்லை. முற்றிலும் அறிந்த முனிவருக்கு அவள் பூர்விகம் புரிந்தது. “நீ சபரீகர்கள் இனப் பெண். உன்னை ‘சபரி’ எனவே நாங்கள் அழைப்போம்.” சபரி! சபரி! சபரி! அவளுக்கு வியப்பு மேலிட, குருவையே பார்த்தபடியிருந்தாள்.

“இன்று முதல் உனக்கு பிடித்த விஷயங்களைச் செய்யலாம். இந்த ஆசிரமத்தையும் கவனித்துக் கொள்.” சபரிக்கு புரிந்து தலையாட்டினாள். ஒரு குடிலில், தான் தங்க வைக்கப்பட்டதில் மேலும் மகிழ்ச்சி. தினமும் பாதையைச் சுத்தம் செய்வது முதல் பூக்கள் பறிப்பது, கோலம் போடுவது, கனிகள் கொண்டுவருவது என எல்லா வேலைகளையும் செய்தாள். இடையிடையே, முனிவர் சொல்லிக் கொடுக்கும் பாடங்களையும் கவனிப்பாள்.

அவள், ஆடை அணிந்து கொள்ளவும், சம்பாஷணைக்கு மொழியையும் கற்றாள். அவளுக்கு மனதில் தோன்றிய புத்துணர்வு முகத்திலும் பொலிவைத் தந்தது. எல்லாம் குருவின் அருள்! நன்றியுடன் அனுதினமும் நினைத்துக் கொண்டாள். மதங்க முனிவர், தவத்தின் உச்சம் தொட்டவர். அவர் போன்ற நல்லவர் இருக்குமிடம், என்றுமே நல்ல அதிர்வுகளை கொண்டிருக்கும். நல்ல அதிர்வுகள், நல்ல எண்ணங்களை உதிக்கச் செய்யும்.

சபரி என்கின்ற சாதாரண மனுஷி, ஒரு தவசியாக மாறலானாள். மதங்க முனிவர், தான் காத்திருந்த நாள் வந்ததாய் உணர்ந்தார். எல்லா சீடர்களையும் அழைத்தார். ஒவ்வொருவரையும் பார்த்து கையை உயர்த்தி ஆசீர்வதித்தார். “நான் என் காலம் முடிந்து பிரம்மலோகம் போக இருக்கிறேன். நான் மிகவும் நிறைவாக இருக்கிறேன். என் அனுக்கிரகம் உங்களுக்கு எப்போதும் உண்டு. நீங்கள் ஒவ்வொருவராக உங்களுக்கு வேண்டிய ஒரு வரத்தை என் ஆசியுடன் பெற்றச் செல்லுங்கள்.

எனக்கு ஒரு பெரிய மாளிகை’
‘எனக்கு ஆயிரம் பொற்காசுகள்’
‘எனக்கு ஒரு அரசு’
‘எனக்கு எப்போதும் நல்ல சாப்பாடு’
‘எனக்கு பெரிய நந்தவனம் வேண்டும்’
‘எனக்கு நீண்ட ஆயுள்’
என ஒவ்வொருவரும் ஒன்றொன்று கேட்டனர்.

“எல்லாமும் தந்தேன்! தந்தேன்.” என மதங்க முனிவர் கூறிக்கொண்டே இருந்தார். சிறிது நேரத்திற்கு பின் முனிவருக்கு மிகுந்த அயற்சி ஆனது. `ஏன் ஒருவருக்குக்கூட உயர்ந்த, உயிர்ப்பான விஷயத்தைக் கேட்க வேண்டும் எனத் தோன்றவில்லை. நான் போதித்ததில் குறையா? நெற்றிப் பொட்டை தேய்த்துக் கொண்டிருக்க, பொறி தட்டியது. “சபரி… சபரி!..” என உரக்க அழைத்தார். சபரி, ஐயன் குரல் கேட்டு உடன் வந்தாள்.

தான் பிரம்மலோகம் போக இருப்பதைச் சொன்ன அடுத்த நொடி சபரி, விசும்பத் துவங்கியது புரிந்தது. சபரிக்கு இப்போதுதான் அநாதையானதாக உணர்ந்தாள். அவளுக்கு வார்த்தை வரவில்லை. முனிவர், மிக நிதானமாக அவளை தேற்றினார். அவளுக்கு மட்டும் கேட்குமாறு,“உன்னைப் பொறுத்தமட்டில் நான் இங்கே, இந்த அறையில் இருப்பேன். நீ மட்டும் என்னை உணர்வாய். சரி! இப்போது உனக்கு வேண்டியதை நீ கேள்.”“எனக்கு என்ன தேவை இருக்கக்கூடும்? நான் வாழ்கிற இந்த வாழ்க்கை நீங்கள் அளித்தது. எனக்கு இது போதும்.” முனிவருக்கு மனம் நெகிழ்ந்தது.

“நீதான் சத்தியவதி! பொதுவாக, நமக்கு வாய்க்கும் எல்லாமுமே நாம் யாசிக்காமலேதான் அருளப்படுகிறது. வாய்க்காமல் போவதெல்லாம் நாம் யாசித்தவையாகத்தான் இருக்கக் கூடும். எதையும் வேண்டுமென வற்புறுத்தாமல் இருப்பதும், எதையும் விரும்பாமல் உன்போல, இருப்பதும் சிறந்தது. நடப்பது எல்லாமுமே நன்றாகத்தான் நடக்கிறது. இனியும் நன்றாகத் தான் நடக்கும் என்ற நம்பிக்கை உன்னதம். உன் மனம் இப்படி இருப்பது பெரிய கொடுப்பினை. உனக்கு நான் மந்திர உபதேசம் செய்ய இருக்கிறேன்.”

மந்திரமா? அப்படி என்றால் என்ன? என்று ஒரு கேள்விகூட சபரிக்கு எழவில்லை. குரு எது சொன்னாலும், செய்தாலும் சரியே என்பது போல, சபரி நின்றிருந்தாள். முனிவர் சபரியின் வலது பக்க காதில் ரகசியமாய், “ராமா.. ராமா.. ராமா..’’ என உபதேசம் செய்தார். முதன் முறையாக “ராம நாமம்’’ கேட்டு பரவசம் மேலிட முனிவரைப் பார்த்தாள். முதன் முதலில் கேள்வி கேட்டாள்.

“இதன் அர்த்தம் என்ன?” என்று.. முனிவர் நிதானமாய் பதிலளித்தார்.

“ராம நாமத்தின் அர்த்தம் தானாகவே ஒரு நாள் நீ எங்கே இருக்கிறாயோ.. அங்கே கதவை தட்டித் தேடி வந்து தரிசனம் கொடுக்கும்! நீ ராம நாமத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியது. அவ்வளவே. எப்பொழுது சொல்லவேண்டும். எங்கே சொல்லவேண்டும். எந்த நேரம், இப்படி எந்த கட்டுப் பாடும் இல்லை. நின்று கொண்டு, நடந்து கொண்டு, உட்கார்ந்து கொண்டு, படுத்துக் கொண்டு, எப்படி வேண்டுமானாலும் ஜபித்துக் கொண்டே இரு!

உன் எல்லாவற்றையும் “ராம நாமம்’’ பார்த்துக் கொள்ளும்.” என முனிவர் கூறிமுடித்ததும், ‘ராமா.. ராமா.. ராமா..’ என சபரி, ராம நாம ஜபத்தை துவங்கினாள். சபரிக்கு, தனக்கு பரம்பொருள் தரிசனம் கிடைக்க இருப்பதை எண்ணி மனம் பூரித்தது. இந்த பெரும் பாக்கியத்தை அளித்த முனிவருக்கு, எப்படி நன்றியை காண்பிப்பது? என புரியாமல் திகைத்தாள். கண்ணீர் மல்க தொழுதாள். மதங்க முனிவர் வாஞ்சையுடன் சபரியை ஆசீர்வதித்தார். பிரம்மலோகம் புகுந்தார்.

சபரிக்கு குருவின் வார்த்தைதான் வேதம். ராம நாமம் அவள் மூச்சு போல தொடர்ந்தது. தினமும் எழுந்திருக்கும் போதே இன்று வந்துவிடுவாரோ! என்று எதிர்பார்ப்புடன் விழிப்பாள். அவர் வந்தால், என்னென்ன பேசவேண்டும் என யோசிப்பாள். என்ன சாப்பிடக் கொடுக்கலாம், கண்டிப்பாக கனிகள் அவருக்கு பிடிக்கும் என முடிவெடுத்தாள். நல்ல ருசியான கனிகளை தட்டில் வைத்து காத்திருப்பாள். இந்தக் கனி ருசியாக இருக்கின்றனவா? என கடித்து பார்த்து தேர்வு செய்வாள். நாட்கள், மாதங்கள், வருடங்கள் நகர்ந்து கொண்டேயிருந்தது.

ஒரு நாள், ஒரு பொழுதுகூட இன்றும் வரவில்லையே என சலிப்போ, ஒரு வருத்தமோ வந்ததில்லை சபரிக்கு. குரு சொன்னதில் உள்ள நம்பிக்கை அவளை என்றும் உற்சாகத்தில் வைத்திருந்தது. ஆசிரமத்தில் உள்ள மற்றோர்களின் கேலியும் கிண்டலும் அவளை கிஞ்சிதமும் அசைக்கவேயில்லை. ராம நாம ஜபமும் காத்திருத்தலும் தொடர்ந்தது. செடி அசைந்தால், காலடி ஓசை கேட்டால், மயில்கள் அகவினால், ‘வந்துவிட்டாரா?’ ஆவல் பொங்க வாசலுக்கு ஓடிவருவதும், திரும்புவதுமாகவே நாட்கள் கடந்தன.

கிட்டத்தட்ட பன்னிரெண்டு ஆண்டுகள் கழிந்து, ஒரு நாள் அவள் ஆவலோடு எதிர்ப்பார்த்திருந்த நாள் வந்தது. ஆசிரம சிறார்கள் மூச்சிரைக்க ஓடிவந்து, “சபரி பாட்டி… தினமும் கேட்பீர்களே! யாராவது என்னை தேடிவந்தார்களா என்று. இன்று ஒருவர் அல்ல இருவர் வந்திருக்கிறார்கள்.” என்று சொன்னதும், சபரிக்கு உடம்பு முழுதும் காதாய் மாறி கேட்டது. சபரி வாசலுக்கு வரும் முன்னர், ராமனும் லக்குமணனும் அந்தக் குடிலின் சிறிய வாசலை குனிந்து கடந்து அவளை நோக்கி வந்து விட்டார்கள். புழுதி படிந்திருந்த கால்கள், மர உரியும், ஜடாமுடியும், அம்பறாத் தூளியுடன் நீல மேக வர்ணமாக ஒருவரும், சிவப்பு நிறமாக மற்றவரும் வந்திருப்பதைக் கண்டு இமைக்க மறந்தாள்.

“பாட்டி எப்படியிருக்கிறீர்கள்? உங்கள் தவம் எப்படி இருக்கிறது?” என்று அவர்கள் கேட்டதும், சபரி, எல்லாமும் நன்றாக உள்ளதாக தலையை மட்டும் அசைத்தாள். ராமன் மேல், வைத்த கண்ணை இமைக்காமல் “உட்காருங்கள்.. உட்காருங்கள்’’ என்றாள். ராமன் திண்ணையில் அமர்ந்தார்.

அவரின் காலடியில் அமர்ந்து, ராமனின் கால்களைக் கழுவி, பின் இதமாகப் பிடிக்க ஆரம்பித்தாள். அருகில் நின்ற லக்குமணன், மாரீசனை கொன்று சீதாபிராட்டியை தேடி அலைந்து திரிந்து இப்போதுதான் ஓரிடத்தில் அமர்ந்திருக்கும் ராமனை பார்த்தபடியிருந்தார். சபரி, லக்குமணனை அமரச் சொல்லி வற்புறுத்தினாள். அண்ணன் முன், அமர மறுக்க, சபரி விடுவதாகயில்லை. ராமன், “பாட்டி சொல்வதைக் கேட்டே ஆகவேண்டும். உட்கார்.’’ என்றார். “ராமருக்கு, சீதையின் பிரிவுத் துயரம் ஒரு புறம் இருந்தபோதிலும், சபரியுடன் பேசுவது மிகவும் பிடித்திருந்தது.

“உங்கள் ஆசிரமம் எப்படியிருக்கிறது?” “அமோகம்”“அப்படியா? இதுவரை சென்ற எல்லா ஆசிரமங்களிலும் ஏதாவது குறைதான் சொன்னார்கள். பாட்டி, நீங்கள் மட்டும்தான் நல்ல வார்த்தை சொன்னீர்கள். மதங்க முனிவர் ஆசிரமம் அல்லவா? அதுதான்.” என்று ராமர் சொல்லிமுடித்ததும், கனிகள் இருந்த தட்டை சபரி எடுத்து, ராமரிடம் கொடுத்தாள். அதனை உண்ட ராமர்,

“ஆஹா! என்ன ருசி!” என ராமர் ருசித்தார்.“இதோ இந்த மரத்தின் கனிகள்தான்.

இங்குள்ள மரங்களின் கனிகள் எல்லாவற்றையும் சுவைத்து பார்த்து தேர்வு செய்தேன்’’ என்று சபரி சொன்னதும், அந்தக் கனி மரத்தை ராமன் தடவிக் கொடுத்தார். மதங்க முனிவர் தவம் செய்த இடத்திற்கு, ராமனை அழைத்துச் சென்றாள், சபரி. அங்கிருந்த விளக்கு அணையாமல் இருப்பதும், அவர் அணிந்த மாலைகள் வாடாமல் இருப்பதும். நிலவிய சுகந்த மணமும், முனிவரின் நீட்சியை உணர்த்தியது. குருவின் கடாட்சம். அவர், ஸ்தூல சரீரத்தில் இல்லாத போதும், எங்கும் வியாபித்திருக்கும்.

ராமன், தன் குலகுரு வசிஷ்டரை நினைவு கூர்ந்தார். `மிதிலை நகரில் சீதை சுயம்வரத்தின்போது விஸ்வாமித்திரர், ஜனகரிடம் ராமனை அறிமுகம் செய்யும்போது, ராமன் தசரதரின் புதல்வன். ஆனால், வளர்த்தது எல்லாமும் வசிஷ்டர்தான்’ என்று குறிப்பிட்டார். அதன் உள் அர்த்தம், ராமன் தசரதர் போல, பல மணம் புரியமாட்டான். என்பதுதான். ராமன், மெல்லியதாகப் புன்முறுவல் செய்தான். அதன் தொடர்ச்சியாக சீதையின் நினைவு மேலிட, கிளம்ப ஆயத்தமானான். அதனை சபரி குறிப்பால் உணர்ந்தாள். என் குருவின் மிகப் பெரிய ஆசியினால் உங்களைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன். உங்களை சாட்சியாக வைத்து, நான் பரமபதம் ஏகப் போகிறேன். ராமனுக்கு வியப்பு மேலிட, “பார்த்தாயா.. சபரிபாட்டி நம்மிடம் எதையும் கேட்கவில்லை.

அவளின் குருபக்தியும், அவள் கொண்ட நம்பிக்கையுமே அவளுக்கு மோட்சம் அருளப்போகிறது. பாட்டி, சீதை இருக்குமிடம் அறிய ஏதேனும் உபாயம் சொல்ல வேண்டும்” என்றார், ராமர். “ராமா! இது என்ன விளையாட்டு. இருப்பினும் கூறுகிறேன். கிஷ்கிந்தையில், சுக்ரீவனை சந்திப்பாய் என்று கூறி, சபரி நேராக ராமன் தொட்ட கனிமரத்தடி அருகில் சென்றாள். காய்ந்த சருகுகளை கொண்டு தீ மூட்டினாள். அதனுள் புகுந்து, சபரி, பரமபதம் அடைந்தாள். வானிலிருந்து மதங்க முனிவர் ஆசீர்வதித்தார். எந்தக் குலத்தில் பிறந்த போதிலும், நல்லவர்களின் சேர்க்கை நன்மையை செய்யும். குரு பக்தி ஒன்றே போதும். என ராமன், கனிமரத்தை பார்த்து வணங்கினான்.

தொகுப்பு: கோதண்டராமன்

The post கனி மரம் appeared first on Dinakaran.

Tags : Pampai river ,Kani Maram ,
× RELATED சபரிமலையில் பக்தர்களுக்கு கூடுதல்...